தினமலர் -வாரமலர்- டி.வி.ஆர்.நினைவுச்சிறுகதைப் போட்டி-2024 ஆறுதல் பரிசுபெற்ற என் கதை
காகிதப்
பூக்களும் மணக்கட்டும்!
              நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.
திருச்சி-
சென்னை அதிவிரைவு புறவழிச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது ரிணால்ட் டஸ்டர் சொகுசு கார். உள்ளே முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் காதுகளில் இயர் பேட் அணிந்துகொண்டு கண்களை மூடி இளையராஜாவின் இசையை ரசித்துக் கொண்டிருந்தான். சென்னையை நெருங்கிக்கொண்டிருந்த அந்தக் கார்  பரணூர் சுங்கச்சாவடி
வந்ததும் வேகத்தைக் குறைத்து மெதுவாக வேகத்தடைகளில் ஏறி இறங்கி ஊர்ந்து செல்ல காரின் கண்ணாடிக் கதவைத் தட்டியது வளையல் அணிந்த கரம் ஒன்று.
      திருநங்கைகள்
சிலர்  வரும்
கார்களை நிறுத்தி பணம் வாங்கிக் கொண்டிருந்தனர். அதில் ஒருத்திதான் இளைஞன்வந்த காரின் ஜன்னலை தட்டியவள். அவள் மீண்டும் ஜன்னலைத்தட்ட 
  காரின் விண்டோ ஓப்பன் ஆக அந்த திருநங்கை கையை உள்ளே நீட்டினாள். ”எதுக்கு காசு கேட்கறீங்க? இப்படி பிச்சை எடுப்பது உங்களுக்கு வெட்கமா இல்லையா?” காரில் இருந்த இளைஞன் கேட்க
        ”எதுக்கு வெட்கப்படனும்? எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கின சமுதாயம்தான் வெட்கப்படணும்! திருநங்கைன்னாலே   
     ஏளனமான
பார்வை!  அசிங்கமான
வார்த்தைகள்! கொஞ்சம் கூட மரியாதை கிடையாது! யாரும் வேலை கொடுப்பது கிடையாது! ஆனா எங்களுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கு இல்லே?” 
அந்த திருநங்கை ஆண் குரலில் கேட்க
 “ ஒத்துக்கறேன்! உங்க நிலைமை
புரியுது. உங்களுக்கு என் கம்பெனியிலே  வேலை
கொடுத்தா வேலை செய்யத் தயாரா?”
    ”சும்மா விளையாடாதீங்க சார்! உங்க கிட்டே இருந்து வேலையை நாங்க எதிர்பார்க்கலை! ஒரு நூறோ இருநூறோ! இல்லை அதிகபட்சம் ஐநூறோ கொடுத்துட்டு கிளம்புங்க!” 
   அந்த இளைஞன் காரை விட்டு கீழே இறங்கினான். ” டிரைவர்! காரை கொஞ்சம் ஓரம் கட்டி நிறுத்துங்க! 
நான் கொஞ்சம் இவங்களோட பேசனும்! ” 
என்றபடி சாலைஓரம் இறங்கி நடக்கலானான்.  
      அதற்குள் அங்கே பிச்சையெடுத்துக்கொண்டிருந்த திருநங்கைகள் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர். கன்னத்தில் தட்டி தலையில் கைவைத்து ஆசிர்வதித்து கை நீட்டினர்.
     ”ஓக்கே! உங்களுக்குத்
தேவை பணம் தானா! அதை தர நான் தயாரா இருக்கேன். அதுக்கு முன்னே எனக்கொரு பதில் தெரிஞ்சு ஆகணும். இங்க இருக்கிறவங்கள்ளே எத்தனை பேருக்கு 
இப்படி பிச்சை எடுக்காம உழைச்சு வேலை செஞ்சு சம்பாதிக்கணும்னு ஆசை இருக்கு! இந்த பிழைப்பு வேணாம் அவமானம் வேணாம்னு நினைக்கிறவங்க முன்னாடி வாங்க!”
   ஒன்றிரண்டு பேர் தயங்கி தயங்கி முன்னே வந்தார்கள்.
  ”உங்களுக்கு நிறைய தயக்கம் இருக்கு! பயப்படறீங்க! நமக்கு என்ன வேலை கிடைக்கும்?னு யோசிக்கிறீங்க! ஆனா இதுலே பயப்படறதுக்கு ஒன்னும் இல்லே! இப்ப திருநங்கைகள் நிறைய பேர் படிச்சு 
நல்ல வேலையிலே இருக்காங்க! டிரைவரா இருக்காங்க! 
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அப்படின்னு நல்ல நிலைமைக்கு வந்திருக்காங்க! அவங்களைப் போல 
பெரிய அளவுக்கு இல்லேன்னாலும் இப்படி ரோட்டுலே கையேந்தி நிற்காம உழைச்சு சாப்பிடனும்னு உங்கள்ளே யாருக்கும் தோணினது இல்லையா? 
 
 ”இப்ப
அரசாங்கமும் எவ்வளவோ நல்ல திட்டங்களை உங்களுக்கு அறிவிச்சு நடைமுறைப்படுத்திட்டு வருது. பழைய காலம் போல இப்ப இல்லை! நீங்களும் இந்த சமூகத்திலே கவுரவமா வாழலாம். அதுக்கு ஒரு வாய்ப்பை நான் தரேன்.  இந்தாங்க
என் விசிட்டிங்க் கார்டு. இதை எடுத்திட்டு என் கம்பெனிக்கு வந்து பாருங்க! உங்க எல்லோருக்கும் 
 ஒரு கவுரவமான வாழ்க்கையை நான் உருவாக்கித் தரேன்”. என்று சொன்னவன் விசிட்டிங் கார்டோடு ஐநூறு ரூபாய் தாளையும் வைத்துக் கொடுத்தான்.
  ”சாரே! சோக்கா
பேசினே…! சரி பத்துநிமிஷம் உன் காலட்சேபம் கேட்டாலும் சுளையா ஐநூறு கிடைச்சுது! ரொம்பத் தேங்க்ஸ்! அப்புறம் நீயும் உன் புள்ளைக்குட்டியும் உன் கம்பெனியும் ரொம்ப நல்லா சவுக்கியமா இருப்பீங்க!” என்று அந்த 
கும்பல் சிரித்தபடி கலைந்து சென்றது.   
  ”சார்! நான்
தான் சொன்னேன்ல! இதுங்கள்ளாம் கிராக்கிங்க! சொகுசா இப்படியே பணம் சேர்த்து பழகிருச்சுங்க! நீங்க காரிலேயே உக்காந்திருந்து ஒரு அம்பதோ நூறோ கைநீட்டனதுகிட்டே கொடுத்திருந்தா 
போதும். இப்போ பாருங்க ஐயாயிரம் வேஸ்ட் ஆயிருச்சு!” டிரைவர் மகேஷ் ஏளனமாகச் சொல்ல,
  ”முதல்லே யாரையும் மரியாதை குறைவா பேசறதை நிறுத்து மகேஷ்! எனக்கு  பணம்
பெருசில்லே..! இந்த அஞ்சாயிரத்தை ஒரு நொடியிலே சம்பாரிச்சிடலாம்! ஆனா சமூகத்திலே ஒரு மாற்றத்தை கொண்டுவரதுதான் கஷ்டம். திருநங்கையா பிறக்கிறது யாரோட குற்றம்? அவங்க குற்றமா? மனுஷப் பிறப்பிலே மட்டும்தான் திருநங்கை,திருநம்பிங்க இருக்காங்களா? எல்லாப் பிறப்பிலேயும் இருக்கு! அங்கே எல்லாம் அப்படி பிறக்கிறவங்களை ஒதுக்கிடறாங்களா? கிடையாது. மனுஷ பிறப்பிலேதான் இப்படி! காலம் காலமா திருநங்கைகளையும் திருநம்பிகளையும் கேவலப்படுத்தி ஒம்பது, அலி,ன்னு கொச்சையாப் பேசி அவங்களை பிச்சை எடுக்கவைச்சு! பாலியல் தொழிலுக்குத் தள்ளி அந்த பிறப்பையே பெரிய குற்றமா ஆக்கி ஒதுக்கி வைக்கிறாங்க  இப்பத்தான்
கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருது. அவங்களையும் மனுஷனா மதிக்க ஆரம்பிச்சு இருக்காங்க! மாற்றம் வர வர திருநங்கைகளோட வாழ்வில் கொஞ்சம் ஏற்றம்
ஏற்பட்டுக்கிட்டு இருக்கு. நானும் அவங்களிடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பறேன். இன்னிக்கு என்கிட்டே விசிட்டிங் கார்ட் வாங்கின பத்து பேருல ஒரு ரெண்டு பேராவது நாளைக்கு நம்ம கம்பெனிக்கு 
வேலை கேட்டு வருவாங்கங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு!” சொன்ன சுதாகரை வியப்பாய் பார்த்தான் டிரைவர்.  
   அடுத்த நாள் காலை மணி பத்து. செங்குன்றம் அடுத்திருந்த பண்டிக்காவனூரில் அந்த மினரல் வாட்டர் கம்பெனி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எம்.டி அறையில் சுதாகர் லேப்டாப்பில் இயங்கிக் கொண்டிருந்தார்.   
   வெளியே
கேட்டில் மூன்று திருநங்கைகள் வந்து நிற்க, வாட்ச்மேன் கோபால் அவர்களை விரட்டினார்.
   ”ச்சூ.. போங்க!
போனவாரம்தானே வந்து காசு வாங்கிட்டுப் போனீங்க! இப்ப எதுக்கு வர்றீங்க?”
   ”அண்ணே! அது
நாங்க இல்லே! எங்களை உங்க ஓனர்தான் வரச்சொன்னாரு!”
 “ என்னது ஓனர் வரச்சொன்னாரா?
    ”சரிசரி! இங்கேயே
நில்லுங்க! உள்ளே போன் செய்து கேட்டுட்டு அனுப்பறேன்?” என்று 
ரூமுக்குள் நுழைந்து சூப்பர்வைசருக்கு போன்செய்தார். சில நிமிடங்களில்  .
    ”ஏய்! யாரு
நீங்க என்ன வேணும்? ஓனரை பார்க்கணும்னு சொன்னீங்களாமே? அதெல்லாம் முடியாது ஆளுக்கு 500 ரூபா தரேன்! எடுத்துட்டு கிளம்புங்க!”  சூப்பர்வைசர்
மணி கோபமாக கத்தியபடி வெளியே வந்தார்.
   உங்க ஓனர்தான் எங்களை வரச்சொன்னாரு! இதோ விசிட்டிங் கார்டு கூட கொடுத்திருக்காரு பாரு!
ஒரு
திருநங்கை விசிட்டிங் கார்டை காட்ட, அதற்குள் இன்னொரு திருநங்கை தன் கையில் இருந்த செல்போனில் சுதாகர் எண்ணுக்கு போன் செய்தாள்.
  ”சார்! நான்
அம்பிகா பேசறேன்! பரணூர் டோல்கேட்ல நேத்து சந்திச்சீங்களே அந்த திருநங்கை,உங்க கம்பெனி வாசல்லே நிக்கறோம் உள்ளே விட மாட்டேங்கறாங்க!”
   அடுத்த நொடி சூபர்வைசர் மணியின் செல்பேசி அடித்தது. எடுத்து ஆன் செய்து, ”சார்..!” எனவும், ”அவங்களை என் கேபினுக்கு அனுப்புங்க! ”என்றதும் பதில் பேசாது அவர்களை உள்ளே வரச்சொல்லிவிட்டு  
  . ”ம்ம்.. இதுங்களுக்கு வந்த வாழ்வைப் பாரேன்!” என்று சக ஊழியரிடம் நக்கலாக சொல்லியபடி கடந்து போனார்.
      உள்ளே
நுழைந்த மூவரையும் அமரச்சொன்னார் சுதாகர். ”வெல்கம்!   என்னோட
அழைப்பை ஏத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்! உங்களோட எஜுகேஷனல் க்வாலிபிகேஷன் என்ன? சர்டிபிகேட்ஸ் இருக்கா?”
 மூவரும்,  ”சார்!
ப்ளஸ்டூ படிக்கும் போதே இப்படி ஆகிட்டோம்! படிப்பை பாதியிலே விட்டுட்டு இந்த தொழிலுக்கு வந்துட்டோம்! படிக்க ஆசை இருக்கு! ஆனா..”
    ”வாய்ப்பை நான் ஏற்படுத்தி தரேன்! இந்த ப்ளாண்ட்ல க்ளீனிங், வாட்டர் பில்லிங்க்லே உங்களுக்கு வேலைப் போட்டு தரேன். மாசம் இருபதாயிரம் சம்பளம். மாசம் ரெண்டுநாள் லீவ் எடுத்துகிடலாம் சம்பளம் பிடிக்க மாட்டோம். விட்டுப் போன உங்க படிப்பைத் தொடரவும் உதவி செய்யறேன். பிரைவேட்டா ப்ளஸ்டூ எழுதி முடிங்க! அப்புறம் ஓப்பன் யூனிவர்சிட்டிலே டிகிரி படிக்கலாம். வேலை நேரம் போக மிச்ச நேரத்திலே படிச்சு முடியுங்க! 
உங்களுக்கு தங்க இடம் கம்பெனியிலேயே அலாட் பண்ணிக்கொடுத்திருவோம். அதுக்கு நீங்க எதுவும் பே பண்ண வேண்டியதில்லை! ஃப்ரிதான். உங்களுக்கு இந்த கம்பெனியிலே வேலை செய்ய சம்மதமா?”
  ”சம்மதம் சார்! வேலையும் கொடுத்து படிக்கவும் உதவி செய்து தங்கவும் இடம் கொடுக்கிற உங்க நல்ல மனசுக்கு கம்பெனி நல்லா வளரும் சார்! நாங்க நாளையிலிருந்து வேலைக்கு வந்துடறோம் சார்..” 
அன்று மாலை சுதாகர் ஆபிஸிலிருந்து கிளம்பும் சமயம் சூப்பர் வைசர் மணி, அக்கவுண்டன்ட், மானேஜர் மற்றும் சில ஊழியர்கள் ஒன்றாய் கேபின் முன் வந்து நின்றனர்.
    ” சார்! நீங்க செய்யறது நல்லா இருக்கா? இப்படி இந்த மூணு ஒம்பதுங்களை கம்பெனியிலே வேலைக்குச் சேர்த்தா எப்படி?  அவங்க
கூட நாங்க எப்படி வேலை பார்க்கிறது?” மணி கேட்க
  ”ஒம்பதுன்னு கொச்சையா சொல்லாதீங்க! அவங்க திருநங்கைகங்க! அவங்களோட வேலை செய்யறதுலே உங்களுக்கு என்ன கஷ்டம்?”
 ”அதில்லை
சார்!  அவங்கல்லாம்
இழி பிறப்பு சார்..!”
   ”எது சார் இழிபிறப்பு? திருநங்கையா பிறக்கிறது அவங்க குற்றமா? அவங்களை சமூகத்திலே ஒதுக்கி வைச்சே இழிநிலைக்கு தள்ளி விடறீங்க பாருங்க நீங்கதான் இழிபிறப்பு..!”
 “சார்! நீங்க எது வேணா சொல்லுங்க! நாங்க அவங்க கூட வேலை செய்ய எங்க மனசு ஒத்துக்காது திருநங்கைங்க கூட ஒண்ணு மண்ணா பழக முடியாது..!அவங்களை கூட சேர்த்துக்க முடியாது. இந்த ஊரும் உலகமும் எங்களை கேவலமா பார்க்கும்.”
  ”அப்படியா? திருநங்கைங்க கூட சேர்ந்து வேலை பார்க்க மாட்டீங்க! ஆனா ஒரு திருநம்பி முதலாளிக்கு கீழே வேலை பார்ப்பீங்களா?”
   அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க..
” நான், உங்க முதலாளி சுதாகர், பொறக்கும் போது சுதா தான். என்னோட பதினைஞ்சு வயசு வரைக்கும் நான் பொண்ணாத்தான் இருந்தேன். அப்புறம் ஆணா மாற ஆரம்பிச்சேன்.கொஞ்சம்
கொஞ்சமா என்னோட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பிச்சுது. என்
செயல்கள் என் குரல் எல்லாம் ஆணின் தன்மையா மாற்ற அடைய  உடைந்து போனேன். ஆனா என்ன பெத்தவங்க என்னை கைவிடலை! என்னைப் புரிஞ்சுகிட்டு
என் தன்னம்பிக்கையை வளர்த்து என்னை ஆளாக்கிவிட்டாங்க!”  
 ”எங்க
குடும்ப உறவுகள் எல்லாம் என்னையும் எங்க பெற்றோரையும் கேலியா பாத்துச்சு! ஆனா எங்க அப்பாவும் அம்மாவும் என்னை விட்டுக் கொடுக்கலை! எங்கப்பாவை பார்த்து உறவு ஜெனம்,” உனக்கா இப்படி ஒரு பிள்ளை பொறக்கணும்னு கேட்டுச்சு! எங்கப்பா என்ன சொன்னார் தெரியுமா? இப்படி ஒரு பிள்ளை எனக்குப் பிறந்ததுனாலேதான் என்னாலே அதை நல்லபடியா வளர்க்க முடிஞ்சது! அவ விரும்பினதை செய்ய முடிஞ்சுது. வேற இடத்திலே பிறந்திருந்தா விரட்டி விட்டிருப்பாங்க! அனாதையா ரோட்டுலே பிச்சை எடுத்துகிட்டு இருந்திருப்பான் என்
பிள்ளையா பிறந்ததுக்கு நான் பெருமைப்படறேன். இவளை ஒரு முன்னுதாரணமா வளர்ப்பேன்னு சொன்னார்.. 
   ”என் தன்னம்பிக்கையை வளர்த்தார். முறையா மருத்துவ சிகிச்சைகளை செய்து என்னை ஒரு முழு ஆணா மாத்திட்டார் என்னை
எம்.பி.ஏ படிக்கவைச்சு. இன்னிக்கு ஒரு பிசினஸ் மேனாவும் உருவாக்கி ஒரு ஐம்பது பேருக்கு முதலாளியாகவும் மாத்தி உயர்த்தி விட்டிருக்கார். உங்க முதலாளி 
சுதாகர் ஒரு திருநம்பி. அவர்கிட்டே இத்தனை நாள் வேலை செய்து சம்பளம் வாங்கி சாப்பிட்டிருக்கீங்க! உங்க சாப்பாடு கசந்திருச்சா! உங்க வாழ்க்கை கசந்திருச்சா!
     காலம்
எவ்வளவோ மாறிடுச்சு!  திருநங்கைகள்
சாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க! எஸ்.ஐ, மேயர், செய்திவாசிப்பாளர், ஐ.ஏ.எஸ். ஆபிஸர், பரதநாட்டியப் பள்ளி முதல்வர்னு பல துறைகளில் சாதிச்சிட்டிருக்காங்க. காகிதப்பூவா இன்னமும் அவங்களை ஒதுக்காம மனுஷங்களா பார்த்து பழகுங்க! சமூகம்ங்கிறது யாரு? நாமதான்.
மாற்றம் ஒவ்வொருத்தர்கிட்டே இருந்து தொடங்கினா சமூகமும் மாறத்தொடங்கிடும்.
மாற்றம் உங்க்கிட்டே இருந்து தொடங்கும்னு நம்பறேன். சுதாகர் பேசப் பேச அவர்களுள் ஓர் இனம்புரியா மாற்றம் துவங்கியிருந்தது.
      சார்! எங்களை
மன்னிச்சிருங்க! ஏதோ அறியாமையிலே தவறாப் பேசிட்டோம் திருநங்கைகளைப் பற்றிய தவறான புரிதல் அப்படி பேச வைச்சிருச்சு! 
அவங்களும் எங்களோட சகோதர சகோதரிகளா நினைச்சு அவங்க உயர ஒத்துழைப்போம்! என்று அவர்கள் சொன்னதும் சுதா என்ற சுதாகர் கண்களில் நீர் திரண்டது. இனி காகிதப் பூக்கள் மணக்க ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை அவருக்குள் துளிர்த்தது.
   முற்றும்.
 
 
 
Comments
Post a Comment